Pulikaal Munivar (Vyakrapathar) | Pulikaal Munivar
புலிக்கால் முனிவர் என்று அறியப்படும் இவரது இயற் பெயர் மழன்.மத்யந்தனர் என்ற முனிவரின் மகனாவார். சிறு வயதிலேயே வேதங்களை கற்ற இவர் சிவனை நாள்தோறும் பூஜித்து வந்தால் மறுபிறவியே இல்லை என்று கூறிய தன் தந்தையின் வாக்கை கேட்டு சிவபூஜை செய்வதையே தனது அத்யாய கடமையாக கொண்டார். அதனால் தில்லை மரங்கள் சூழ இருந்த வனத்தில் உள்ள சிவனை வழிபட தில்லைவனம் வந்து அடைந்தார். இந்த தில்லை வனமே இன்று சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது. இவர் நல்ல மலர்களால் மட்டுமே சிவனை அலங்கரிக்க என்னினார். பிற வண்டுகள் தேனுக்காக பூக்களை தீண்டிவிட்டால் அதனுடைய பரிசுத்தம் போய்விடும் என்ற காரணத்தினாலும், அழுகிய பூக்கள் கலந்து விடக்கூடாது என்ற அச்சத்தினாலும், மிக அதிகாலையில் இவர் மலர்களை பறித்துவிடுவார். இவ்வாறு தினமும் மரம் ஏறிப்பறிக்க சிரமமாக இருப்பதால் இவர் சிவனிடம் தனக்கு புலியினுடைய கால்கள் வேண்டும் என்று தவம் மேற்கொண்டார் . அதை ஏற்றுக்கொண்ட சிவன் அவருக்கு புலிக்கால்களை வரமாக வழங்கினார். அதுவே அவரது பெயர் காரணமாயிற்று. வியாக்கிரபாதர் என்று இவருக்கு மற்றொரு பெயரும் உண்டு . வியாக்கிரம் என்ற சொல் புலியை குறிக்கும். மழமுனிவர் என்று மற்ற முனிவர்களால் அழைக்கப்பெற்றார்.
ஒரு சமயம் , வைகுண்டத்தில் விஷ்ணுவை தாங்கிக்கொண்டிருந்த ஆதிசேஷன் திடீரென விஷ்ணுவின் பாரம் கூடியதை உணர்ந்து அதற்கான காரணம் வினவினார். அப்போது விஷ்ணு தில்லைவனத்தில் சிவனின் திருநடனம் கண்ட களிப்பில் உடலில் பாரம் அதிகமானதாக கூறினார். இதனை கேட்ட ஆதிசேஷர் தானும் அதனை காண வேண்டும் என்று தனது விருப்பத்தை விஷ்ணுவிடம் தெரிவித்தார். அதனை ஏற்ற விஷ்ணு ஆதிசேஷன் தனக்கு பிள்ளையாக பிறக்கவேண்டும் என்று வேண்டிய தம்பதியின் கோரிக்கையை நிறைவேற்றி பூலோகத்தில் அவர் பிறப்பெடுக்க செய்தார். இவருக்கு பதஞ்சலி என்று பெயரிடப் பட்டது. தில்லைவனத்திற்கு சென்று புலிக்கால் முனிவரை கண்ட இவர் தனது சிவனின் நடனம் காணும் ஆவலை கூறினார். இருவரும் சிவபெருமானின் நடன நிகழ்விற்காக காத்திருந்தனர். மார்கழி மாதம் திருவாதிரை அன்று ஒளியுடன் அவதரித்த சிவன் தனது ஆனந்த தாண்டவத்தை அரங்கேற்றினார். இதனை கண்டு வியாக்கிரபாதர் மற்றும் பதஞ்சலி முனிவர் பேரானந்தம் கொண்டனர்.
சில காலங்களுக்கு பிறகு தான் ஜீவ சமாதி கொள்ளவேண்டிய இடத்தை திவ்யத்ரிஷ்டி மூலம் அறிந்து மகிழம் மற்றும் வில்வமரங்கள் சூழ்ந்த புண்ணிய பூமியாகிய திருப்பட்டூர் வந்து அடைந்தார். அங்கு தினமும் சிவனுக்கு அபிஷேக ஆராதனை செய்து வந்த இவர் நீர்நிலைகள் வற்றுவதை கண்டு கவலையுற்றார். ஒருநாள் சிவபூஜைக்கான நீர் கிடைக்காதமையால் மிகுந்த வருத்தம் கொண்டு வானில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்க்கு அபிஷேகம் செய்ய கங்கை நீரை எடுத்து சென்ற இந்திரனின் வாகனமான ஐராவத யானை செல்வதை கண்டு தனக்கும் பூஜைக்கு நீர் அளிக்குமாறு கேட்டார். அவரது கோரிக்கையை மறுத்த யானையின் மேல் கொண்ட கோபத்தினால் தனது புலிப்பாதங்கள் கொண்டு பூமியில் ஓங்கி உதைத்தார். அவர் உதைத்த இடம் குழியாகி நீரூற்றாய் பெருக்கெடுத்தது. அவர் அந்த நீரில் நீராடி சிவபெருமானுக்கு பூஜை மேற்கொண்டார். இத்திருக்குளம் புலி பாய்ச்சி தீர்த்தம் என்று அறியப்படுகிறது. சிவன் தனது கங்கை நீரையே வரவழைத்ததாக ஐதீகம். கங்கைக்கு நிகரான திருக்குளம் அமைந்தமையால் சிவபெருமானுக்கு காசி விஸ்வநாதர் என்று பெயரிட பட்டது.
திருப்பட்டூர் காசி விசுவநாதர் திருக்கோயிலில் இவர் ஜீவ சமாதி அடைந்தார்.அன்னை விசாலாட்சி சந்நதிக்கு எதிரே இவரது ஜீவசமாதி உள்ளது.
No comments:
Post a Comment